🐟 தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கண்மாய், குளம் மற்றும் இதர நீர் தேக்கங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன்களுக்கான மீன்குஞ்சுகளை மீன் பண்ணைகள் இருப்பு செய்து விற்பனை செய்கின்றன.
ஆண்டு முழுவதும் வளர்ப்பு :
🐟 கட்லா, ரோகு, மிருகால், புல்கெண்டை, வெள்ளிகெண்டை, சாதாகெண்டை, விரால், கொடுவா, பாபுலெட் போன்ற இனங்களை ஆண்டு முழுவதும் இருப்பு செய்து விற்பனை செய்யலாம். மீன்குஞ்சு இருப்பு வளர்ப்பு குளங்களை பொருத்த அளவில் அதன் தண்ணீரின் உப்புத்தன்மை சரியான அளவில் இருக்க வேண்டும். அதேபோல், கார அமிலத்தன்மை என்பது 7.5 முதல் 8.5 என்ற அளவில் இருக்க வேண்டும். இப்படி தயார் செய்யப்பட்ட நீர் தேக்கத்தில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்யலாம்.
🐟 பொதுவாக, ஒரு ஏக்கர் அளவுள்ள குளத்தில் 10 லட்சம் நுண்குஞ்சுகளை இருப்பு செய்தால் அதில் 3 லட்சம் குஞ்சுகள் தான் விற்பனை செய்யும் வகையில் இருக்கும். குஞ்சுகள் வளரும் நிலையில் அவற்றை மீன் வளர்ப்பு பண்ணைகளுக்கு விற்பனை செய்யலாம்.
🐟 இதுபோல் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படும் குஞ்சுகளை விற்பனை செய்யும்போது அதன் வயதை வைத்து அதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, 35 நாள் வரை வயதுள்ள மீன்குஞ்சுகள் 1 இஞ்ச் அளவு வரை பெருத்திருக்கும். இதே போன்று, இருப்பு செய்யப்பட்ட 70 நாள் ஆன குஞ்சுகள் 2 இஞ்ச் வரை நீளம் கொண்டதாக இருக்கும். இதே போல், இருப்பு செய்யப்பட்டு 90 நாட்கள் ஆன மீன்குஞ்சுகள் 3 இஞ்ச் அளவு வளர்ந்து காணப்படும். இவ்வாறாக, 5 இஞ்ச் நீளம் வரை வளர்ப்பு செய்த மீன்குஞ்சுகளை விற்பனை செய்யலாம்.
ஏற்ற உணவு :
🐟 பொதுவாக, இது போன்ற மீன்குஞ்சுகளுக்கு உணவாக தவிடு, புண்ணாக்கு, சோளமாவு, கம்புமாவு, மினரல் மிக்ஸ், சோயாமாவு போன்றவற்றை அளிக்கலாம். 6 மாதங்கள் வரை இந்த குஞ்சுகளை குளத்தில் இருப்பு செய்து விற்பனை செய்து வரலாம்.
🐟 ஒரு ஏக்கர் அளவுள்ள குளத்தில் 6 மாதங்கள் வரை இருப்பு செய்து வளர்க்கும் போது நுண்குஞ்சு, ஆள்கூலி, உரம் என்று அனைத்து செலவுகளும் போக 1 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கலாம். பொதுவாக, மீன்குஞ்சுகளை இருப்பு செய்து மீன் வளர்ப்போருக்கு விற்பனை செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவனம் :
🐟 மீன் வளர்க்கப்போகும் இடத்தில் எப்போதும் தண்ணீர் குறைவில்லாமல் இருக்க வேண்டும். தீவனத்தை சரியான அளவில் மட்டுமே இட வேண்டும். மீன்குஞ்சு வளர்க்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டம் நிறைந்த இடமாகவும் இருக்க வேண்டும். ஆர்வம், தொடர்ந்து உழைப்பு இருந்தால் மீன்குஞ்சு வளர்ப்பில் சாதிக்கலாம்